ஓடும் பஸ்சில் கஞ்சா கடத்திய முதியவர் உள்பட 2 பேர் கைது
நாட்டறம்பள்ளி அருகே ஓடும் பஸ்சில் கஞ்சா கடத்திய முதியவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு நாட்டறம்பள்ளி வழியாக செல்லும் பஸ்சில் கஞ்சா கடத்துவதாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்குதகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில், நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலிசார் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஆந்திர, தமிழக எல்லையான கொத்தூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த பஸ்சை நிறுத்தி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் பழையபேட்டை பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் சித்தன் (வயது 32), கோழி மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (78) ஆகியோர் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும்போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.