மாமியார் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து
ிணத்துக்கடவு அருகே கோபித்து சென்ற மனைவியை அழைத்து வர சென்றபோது ஏற்பட்ட தகராறில் மாமியார் உள்பட 2 பேரை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே கோபித்து சென்ற மனைவியை அழைத்து வர சென்றபோது ஏற்பட்ட தகராறில் மாமியார் உள்பட 2 பேரை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தொழிலாளி
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கொண்டம்பட்டி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் நல்லசாமி. இவருடைய மனைவி காமாட்சி (வயது 47). இவர்களுக்கு கார்த்திகேயன் (24), சிவமணி (22) என்ற 2 மகன்களும், ஜோதிமணி என்ற மகளும் உள்ளனர். நல்லசாமி உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார்.
ஜோதிமணிக்கும், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஆறுமுகம் (30) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 7 வயதில் பெண் குழந்தை உள்ளது.
ஆறுமுகம்-ஜோதிமணி தம்பதியினர் குழந்தையுடன் பழனி அருகே உள்ள பாலசமுத்திரம் பகுதியில் வசித்து வந்தனர். ஆறுமுகம் தேங்காய் வெட்டும் தொழிலுக்கு சென்று வருகிறார்.
குடும்ப தகராறு
ேநற்று முன்தினம் காலையில் ஜோதிமணிக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஜோதிமணி கோபித்துக்கொண்டு கொண்டாம்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆறுமுகம், மனைவியை அழைத்து செல்ல மாமியார் வீட்டிற்கு வந்தார். பின்னர் தனது மனைவியை பார்த்து, குடும்பம் நடந்த பழனிக்கு வருமாறு அழைத்துள்ளார்.
அப்போது கணவன்-மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காமாட்சி மற்றும் அவரது வீட்டில் வசித்து வரும் உறவினர் ஈஸ்வரன் ஆகியோர் ஆறுமுகத்தை கண்டித்ததுடன், பிரச்சினையை காலையில் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று கூறியதாக தெரிகிறது.
மாமியாருக்கு கத்திக்குத்து
இதனால் அவர்களுக்கும் ஆறுமுகத்துக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமியார் காமாட்சியை குத்தினார். இதனை தடுக்க வந்த அவருடைய உறவினர் ஈஸ்வரனையும் கத்தியால் குத்தினார். மேலும் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு, ஆறுமுகம் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.
இதற்கிடையில், சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காமாட்சி, ஈஸ்வரன் ஆகிய 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கைது
இதுகுறித்து அறிந்த கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கருப்பசாமிபாண்டியன், ஜெகதீசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஆறுமுகத்தை வலைவீசி தேடி வந்தனர். அப்போது கொண்டம்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த ஆறுமுகத்தை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
குடும்ப தகராறில் மாமியார் உள்பட 2 பேரை தொழிலாளி கத்தியால் குத்தி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.