சலூன் கடை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
பந்தலூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை அடிக்க முயன்ற வழக்கில், சலூன் கடை உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பந்தலூர்,
பந்தலூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை அடிக்க முயன்ற வழக்கில், சலூன் கடை உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஏ.டி.எம். எந்திரம்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளியில் கனரா வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க கும்பல் முயன்றது. இதுகுறித்து வங்கி மேலாளர் விவேகானந்தன் சேரம்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் ஏ.டி.எம். எந்திரத்தில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்து, ஆசாமிகளை தேடி வந்தனர். ஆனால், அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது. இதையடுத்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின்படி, சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிசந்திரன், சிக்கந்தர், ராஜ்குமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
2 பேர் கைது
இதுகுறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தியதில், கொளப்பள்ளி குறிஞ்சி நகரை சேர்ந்த தமிழ்செல்வன் என்ற சசி (வயது 45), எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மனோஜ்குமார் என்ற ராஜா (49) ஆகிய 2 பேர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் சம்பவத்தன்று ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த தமிழ்செல்வன், மனோஜ்குமார் 2 பேரும் முகமூடி அணிந்து கொண்டு முதலில் கண்காணிப்பு கேமராக்களை செயலிழக்க செய்து உள்ளனர்.
பின்னர் மரக்கட்டை, கடப்பாறை போன்றவற்றின் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால், அந்த சமயம் பொழுது விடிந்ததால் முயற்சியை கைவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. மனோஜ்குமார் வங்கி முன்பு சலூன் கடை வைத்து உள்ளார். மேலும் 2 பேரும் எதுவும் தெரியாதது போல் போலீசாரிடம் நாடகமாடியது தெரியவந்தது. தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை பந்தலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர்.