செருப்பு கடை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது


செருப்பு கடை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்ததாக செருப்பு கடை உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்ததாக செருப்பு கடை உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

செருப்பு கடை

பொள்ளாச்சியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க மளிகை கடைகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மார்க்கெட் ரோட்டில் உள்ள செருப்பு கடை ஒன்றில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தாக நகர மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பொள்ளாச்சி கரிகாசோழன் வீதியை சேர்ந்த ஜிதேந்திரகுமார் (வயது 31) என்பது தெரியவந்தது. மேலும் கோவையில் இருந்து புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து, பொள்ளாச்சி பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதற்கிடையில் மளிகை கடை, குடோனில் வைத்து விற்பனை செய்தால் தெரிந்து விடும் என்பதற்காக செருப்பு கடையில் வைத்து ரகசியமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 211 கிலோ 800 கிராம் புகையிலை பொருட்கள், ரூ.8 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

வாகன சோதனை

இதேபோன்று பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டியில் நகர கிழக்கு போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக சென்ற மொபட்டை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது மொபட்டில் இருந்த மூட்டைகளில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் கேரளா மாநிலம் கந்தமங்கலத்தை சேர்ந்த சுதீன்குமார் (25) என்பது தெரியவந்தது. மேலும் தற்போது சமத்தூரில் குடியிருந்து வரும் அவர் புகையிலை பொருட்களை கடத்தி சென்று விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 11 கிலோ 750 கிராம் புகையிலை பொருட்கள், மற்றும் மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story