மின்வாரிய உதவி என்ஜினீயர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்

தற்காலிக மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி என்ஜினீயர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மலுமிச்சம்பட்டி
தற்காலிக மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி என்ஜினீயர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தற்காலிக மின்இணைப்பு
கோவையை அடுத்த போத்தனூர் பாரத் நகரை சேர்ந்தவர் காளியப்பன். இவருடைய மகன் கார்த்திகேயன்.
இவர் மலுமிச்சம் பட்டி அருகே எம்.பி.ஜி. நகரில் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வருகிறார்.
அதற்கு தற்காலிகமாக மின் இணைப்பு கேட்டு மலுமிச்சம்பட்டி மின்வாரிய அலுவலகத்துக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பித்தார்.
இதையடுத்து அவர் அந்த அலுவலகத்தில் உள்ள உதவி என்ஜினீயர் சுப்ரமணியன் என்பவரை கடந்த 16-ந் தேதி சந்தித்து தனக்கு தற்காலிக மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி உள்ளார். அதற்கு அவர் மின்இணைப்பு வழங்க லஞ்சம் கேட்டதாக கூறப் படுகிறது.
ரூ.5 ஆயிரம் லஞ்சம்
இதையடுத்து கார்த்திகேயனிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சமாக வாங்கி வரச்சொல்லி அங்கு பணியாற்றும் போர்மேன் சங்கர் கணேஷ் என்பவரை அனுப்பி உள்ளார். அவர்கள் பேசியதில் கார்த்தி கேயன் ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர சம்மதித்ததாக தெரிகிறது.
இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத கார்த்திகேயன், கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார், உதவி என்ஜினீயர்சுப்ரமணியன், போர்மேன் சங்கர் கணேஷ் ஆகியோரை பொறிவைத்து பிடிக்க முடிவு செய்தனர்.
பொறி வைத்து பிடித்தனர்
அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 24-ந் தேதி கார்த்தி கேயனிடம் ரசாயணம் தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுத்து அனுப்பி விட்டு மறைந்து இருந்தனர். அப்போது அங்கு உதவி என்ஜினீயர் இல்லை. போர்மேன் சங்கர் கணேஷ் மட்டும் இருந்தார்.
அவரிடம் கார்த்திகேயன் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். அதை போர்மேன் சங்கர் கணேஷ் வாங்கிய போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இதற்கிடையே அங்கு வந்த உதவி என்ஜினீயர் சுப்ரமணியத்திடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் லஞ்சம் வாங்கியதில் தொடர்பு இருந்ததால் சுப்ரமணியனையும் போலீசார் கைது செய்தனர்.
பணியிடை நீக்கம்
லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான என்ஜினீயர் சுப்ரமணியன், சங்கர் கணேஷ் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கையாக விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட மின்வாரிய முதன்மை என்ஜினீயர் டேவிட் உத்தரவிட்டார்.






