கல்லூரி மாணவியிடம் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது


கல்லூரி மாணவியிடம் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது
x

கோவை அருகே கல்லூரி மாணவியிடம் செல்போனை பறித்த சிறுவன் உள்பட 2 பேரை 5 கி.மீட்டர் தூரம் விரட்டிச்சென்று போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

கோயம்புத்தூர்


கோவை அருகே கல்லூரி மாணவியிடம் செல்போனை பறித்த சிறுவன் உள்பட 2 பேரை 5 கி.மீட்டர் தூரம் விரட்டிச்சென்று போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

கல்லூரி மாணவியிடம் செல்போன் பறிப்பு

நீலகிரி மாவட்டம் கொலக்கொம்பை அருகே உள்ள தூதுவர் மட்டத்தைச் சேர்ந்தவர் விஜயன். இவருடைய மகள் சாரிகா (வயது 19). இவர் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். 3-ம்ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று சாரிகா தனது தோழி ஆஷா டோராவுடன் கல்லூரி முடிந்து அங்குள்ள விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

கோவை- பொள்ளாச்சி ரோட்டில் செல்லும்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆசாமிகள் சாரிகா கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

போலீசார் விரட்டி பிடித்தனர்

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து மதுக்கரை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நெடுஞ்சாலை ரோந்து படை போலீஸ்காரர் பிரதீப், ஜெயக்குமார் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற அந்த 2 பேரையும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்கள் 2 பேரையும் மதுக்கரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

சிறுவன் உள்பட 2 பேர் கைது

தொடர்ந்து அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரம் விசாரணை விசாரணை நடத்தினார். இதில் அவர்கள் கிணத்துக்கடவு அருகே உள்ள சொலவம்பாளையத்தை சேர்ந்த பிரவீன்ராஜ் (21), மற்றொருவர் 17 வயது சிறுவன் என்பதும், கல்லூரி மாணவியிடம் செல்போன் பறித்ததும் தெரியவந்தது.

இதில் பிரவீன் ராஜ் தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராகவும், சிறுவன் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் வேறு எதுவும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களாக என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story