திருவட்டார் அருகேசெல்போன் திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது
திருவட்டார் அருகே செல்போன் திருடியதாக சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு, 8 செல்போன்கள் மீட்கப்பட்டன.
திருவட்டார்:
திருவட்டார் அருகே செல்போன் திருடியதாக சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு, 8 செல்போன்கள் மீட்கப்பட்டன.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
செல்போன் விற்க முயற்சி
திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதருக்கு வேர்க்கிளம்பி சந்தை அருகில் 2 பேர் திருட்டு செல்போன்களை விற்க முயற்சிப்பதாக தகவல் கிடைத்தது.
உடனே அவர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம் மற்றும் போலீசாருடன் விரைந்து வந்தார். அப்போது அங்கு 2 பேர் நின்று கொண்டு இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது, வெட்டுக்குழி கிழங்குவிளையை சேர்ந்த ரெத்தினதாஸ் என்பவரின் மகன் நிஷாந்த் (வயது 19) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
திருட்டு
அப்போது, நிஷாந்த் பாலிடெக்னிக் கல்லூரி படிப்பை கடந்த ஆண்டு பாதியில் நிறுத்தியதாக கூறினார். மேலும் கல்லூரியின் உள்ளே செல்லும் போது செல்போன் கொண்டு செல்லக்கூடாது என்பதால், மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் செல்போன்களை வைத்து பூட்டி விட்டு செல்வார்கள். அந்த செல்போனை திருடுவது குறித்து பக்கத்து ஊரைச்சேர்ந்த சிறுவனிடம் தெரிவித்தேன். மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டுள்ள செல்போன்களை திருடி விற்று, அதில் கிடைக்கும் பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழலாம் எனவும் ஆசை வார்தைகள் கூறினேன். அவனும் அதற்கு ஒப்புக்கொண்டான். அதைத்தொடர்ந்து கடந்த 16-ந்தேதி மதியம் 2 மணி அளவில் நான் படித்த பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்று அங்கு நிறுத்தியிருந்த ஒரு மோட்டார் சைக்கிளை கள்ளச்சாவி போட்டு திறந்தோம். அதில் இருந்த 8 விலை உயர்ந்த செல்போன்களையும் திருடி, அவற்றை விற்பதற்காக வேர்க்கிளம்பி சந்தை அருகில் உள்ள கடைக்கு வந்ததும் தெரிய வந்தது.
கைது
அதைத்தொடர்ந்து நிஷாந்த் உள்பட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 செல்போன்கள் மீட்கப்பட்டன.
பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் செல்போன்கள் திருடியதோடு அவற்றை கடையில் விற்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.