போலீஸ் ஏட்டு மகன் உள்பட 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் போலீஸ் ஏட்டு மகன் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
வெவ்வேறு சம்பவங்களில் போலீஸ் ஏட்டு மகன் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
போலீஸ் ஏட்டு மகன்
திருச்சி பீமநகரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் மோகன் (வயது 56). இவர் திருச்சி செசன்சு கோர்ட்டு போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் முரளிதரன் (29). டிப்ளமோ படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக சம்பவத்தன்று எலிகளை கொல்ல பயனபடுத்தும் மருந்தை (விஷம்) தின்று மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்தநிலையில் முரளிதரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி செசன்சு கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுவுக்கு அடிமை
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் சசிகுமார் (47). கடந்த 10 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வசித்து வந்த இவர், மதுப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்துள்ளார். ஒரு வருடத்துக்கு முன்பு இவருடைய மகனும் இறந்துவிட்டார்.
இந்தநிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.