கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் உள்பட 2 பேர் கைது
கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் தூத்துக்குடி கரடிகுளத்தை சேர்ந்த மாடசாமி (வயது 26) என்பவரை கடந்த 2018-ம் ஆண்டு போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவருக்கு கோர்ட்டு பிடியாணை பிறப்பித்தது. இந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.
அதேபோல் அம்பை போலீஸ் நிலையத்தில் கடந்த 2008-ம் ஆண்டு கொள்ளை வழக்கில் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளியே வந்த கோடரங்குளம் வடக்கு தெருவை சேர்ந்த முருகன் (51) என்பவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் அவருக்கு கோர்ட்டு பிடியாணை பிறப்பித்தது. இந்த நிலையில் அவரை அம்பை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.