தம்பதியிடம் பணம் பறிக்க முயன்ற பெண் உள்பட 2 பேர் கைது


தம்பதியிடம் பணம் பறிக்க முயன்ற பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 Jun 2023 4:00 AM IST (Updated: 30 Jun 2023 4:00 AM IST)
t-max-icont-min-icon

குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி தம்பதியிடம் பணம் பறிக்க முயன்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

கோயம்புத்தூர்

டவுன்ஹால்

குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி தம்பதியிடம் பணம் பறிக்க முயன்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஜூஸ் கடைக்காரர்

கோவை குனியமுத்தூர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 42). இவருடைய மனைவி ரஞ்சனி. இவர்கள் அதே பகுதியில் குளிர்பானங்கள் மற்றும் பழ ஜூஸ் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்கள். கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்தவர்கள் பீம் (42), குடியா (35). அண்ணன் தங்கைகளான இவர்கள் இருவரும் கோவையில் நடைபாதைகளில் வசித்து துணி வியாபாரம் செய்து வந்தனர்.

இவர்கள் 2 பேரும் சுதாகர்-ரஞ்சனியின் கடைக்கு தினமும் பழ ஜூஸ் குடிக்க வருவது வழக்கம். இவர்கள் தங்கள் ஊரில் பூமிக்கு அடியில் புதையல் இருப்பதாகவும், அதனை குறைந்த விலைக்கு விற்பதாகவும் அவரிடம் கூறியுள்ளனர். மேலும் தங்களிடம் குறைந்த விலையில் தங்கம் உள்ளதாகவும் ரூ.25 ஆயிரம் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம் என்றும் ஆசைவார்த்தை கூறி உள்ளனர்.

பணத்தை பறிக்க முயற்சி

குறைந்த விலைக்கு தங்கம் கிடைப்பதால் இதை உண்மை என்று நம்பிய சுதாகர், ரஞ்சனி ஆகியோர் ரூ.25 ஆயிரத்தை தயார் செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் பணத்தை எடுத்துக்கொண்டு சுதாகர், ரஞ்சனியை ஒப்பணக்காரவீதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகே வருமாறு பீம், குடியா சொன்னார்கள்.

இதையடுத்து சுதாகர்-ரஞ்சனி தம்பதியினர் பணத்துடன் அங்கு வந்தனர். அப்போது அங்கு பீம், குடியா வந்து அவர்களிடம் பணம் எங்கே என்று கேட்டனர். அதற்கு அவர்கள் ஒரு பையில் உள்ளது என்று கூறி பணப்பையை காட்டினர்.

இதையடுத்து தங்கத்தை கொண்டுவருவதாக கூறிய அவர்கள் திடீரென ரஞ்சனி கையில் வைத்து இருந்த பணப்பையை நைசாக பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றனர்.

2 பேர் கைது

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ரஞ்சனி சத்தம்போட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் 2 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து கடை வீதி போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணையன், சப்-இன்ஸ்பெக்டர் பாமா ஆகியோர் பீம், குடியா மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்களை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story