திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


சேலத்தில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம்

வழிப்பறி

சேலம் பள்ளப்பட்டி சினிமா நகரை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 35). இவர், கடந்த மே மாதம் 28-ந் தேதி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தார். அங்கு அவர் நடந்து சென்ற வீராணத்தை சேர்ந்த முருகன் என்பவரை வழிமறித்து மிரட்டி ரூ.450-ஐ பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விசாரணையில், செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் புகுந்து திருடுதல், இருசக்கர வாகனங்கள் திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் பாண்டியன் ஈடுபட்டதும், அவர் மீது சேலம் மாநகரில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும், 2003 முதல் 2022-ம் ஆண்டு வரை 9 முறை அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

திருச்சி வாலிபர்

இதேபோல், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்தவர் ரகுபதி (27). இவர், கடந்த மாதம் தனது கூட்டாளியுடன் சேர்ந்து தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகே நடந்து சென்ற சதீஷ்குமாரை வழிமறித்து ரூ.5 ஆயிரத்து 500-ஐ பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுபதியை கைது செய்தனர்.

ஏற்கனவே இவர் மீது சேலம் மாநகரில் பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடிகளை உடைத்து ரூ.3 லட்சம் பணம், விலை உயர்ந்த செல்போன், மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை திருடியதாகவும் வழக்குகள் உள்ளன.

குண்டர் சட்டத்தில் கைது

இதனால் பாண்டியன் மற்றும் ரகுபதி ஆகியோர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு மாநகர போலீஸ் கமிஷனருக்கு சேலம் டவுன் போலீசார் பரிந்துரை செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து கமிஷனர் விஜயகுமாரி நேற்று உத்தரவிட்டார்.

இவர்களில் பாண்டியன் 10-வது முறையாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story