கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயற்சி


கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 10 July 2023 5:02 PM IST (Updated: 10 July 2023 7:08 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தின் போது வெவ்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தின் போது வெவ்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. சேத்துப்பட்டு தாலுகா ஆத்துரை கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சரவணன் (வயது 35) நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அலுவலக நுழைவு வாயில் முன்பு அவர் திடீரென மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், ''தனது குடும்பத்துக்கு பூர்வீகமாக 4 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 45 செண்ட் நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர்.

அவர்களிடம் இருந்த நிலத்தை அளவீடு செய்து மீட்டு தரக் கோரி பல முறை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே நிலத்தை அளவீடு செய்ய வலியுறுத்தி தீக்குளிக்க வந்தேன்'' என்றார்.

பின்னர் அவரை போலீசார் மேல் விசாரணைக்காக திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

வழிபாதை அடைப்பு

அதேபோல் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்த கீழ்பென்னாத்தூர் அருகில் சம்மந்தனூர் பகுதியை சேர்ந்த சிவசங்கரன் (47) என்பவர் திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், ''சம்மந்தனூர் பகுதியில் கடந்த 2005-ம் ஆண்டு வீட்டு மனைவாங்கி வீடு கட்டி வசித்து வருகின்றேன். கடந்த சில மாதங்களாக எனது வீட்டிற்கு சென்று வரும் வழி பாதையை சிலர் முள்வேலி போட்டு அடைந்து உள்ளனர்.

இது குறித்து கடந்த 3 மாதங்களாக வருவாய்த் துறை அலுவலகத்தில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி தீக்குளிக்க வந்தேன்'' என்றார்.

பின்னர் அவரையும் போலீசார் மேல் விசாரணைக்காக திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சரவணன் மற்றும் சிவசங்கரன் ஆகியோர் மீது திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story