நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது
பட்டிவீரன்பட்டி அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மான், காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இவற்றை சிலர் வேட்டையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த பகுதியில் பட்டிவீரன்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் நாட்டுத்துப்பாக்கி ஒன்று இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். திடீரென்று அவர்கள் தப்பியோட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சித்தரேவு 7-வது வார்டை சேர்ந்த சோலைராஜ் (வயது 30), 1-வது வார்டை சேர்ந்த ராமு (30) என்றும், வனப்பகுதியில் முயல் வேட்டையில் ஈடுபடுவதற்காக நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.