பள்ளி அருகே போதை ஊசி-மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது
பள்ளி அருகே போதை ஊசி-மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொன்மலைப்பட்டி:
2 பேர் கைது
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அரசு ஆதிதிராவிடர் பள்ளி அருகே போதை ஊசிகள் மற்றும் மாத்திரைகள் தலா ரூ.300-க்கு விற்கப்படுவதாக திருவெறும்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த நாகராஜன் மகன் புதின்ராஜ் (வயது 20), வடக்கு காட்டூர் அண்ணா நகரை சேர்ந்த ஜோசப் மகன் ஜெகன் (22) ஆகியோர் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் போதை மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்தனர்.
ரெயில் மோதி ஒருவர் பலி
*சமயபுரம் சக்தி நகரை சேர்ந்தவர் பார்த்தசாரதி(59). இவர் தனது மொபட்டில் நேற்று திருச்சி நோக்கி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நம்பர் ஒன் டோல்கேட் ஒய் ரோடு அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*ஸ்ரீரங்கம்-பொன்மலை ரெயில் நிலையங்களுக்கு இடையே சம்பவத்தன்று இரவு சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக சென்ற சென்னை-கொல்லம் விரைவு ரெயில் அவர் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தேவதானபுரம் கிராம நிர்வாக அலுவலர் அனிஷ்பாத்திமா அளித்த புகாரின்பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணை தாக்கியவர் கைது
*முசிறியை அடுத்த சேந்தமாங்குடி பாலக்கட்டை அருகே மது விற்ற அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் சிவாவை(30) சப்-இன்ஸ்பெக்டர் ராஜதுரை கைது செய்து, அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.
*முசிறியை அடுத்த அழகாப்பட்டி மேலத்தெருவை சேர்ந்த ராஜாவின் மனைவி லோகேஸ்வரி(23). இவரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கரின் மகன் தனசேகர்(30) தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது. இதனை லோகேஸ்வரியும், அவரது கணவர் மற்றும் உறவினர்களும் கண்டித்துள்ளனர். இதையடுத்து தனசேகர், லோகேஸ்வரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப் பதிவு செய்து தனசேகரை கைது செய்தார்.