21 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது


21 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

21 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேரையும் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

கோவை, அக்.21-

கோவையில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறித்து கஞ்சா விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. என்ன தான் போலீசார் நடவடிக்கை எடுத்தாலும், அதனையும் மீறி கஞ்சா விற்பனை பெருகி வருகிறது. இதற்காக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோவைக்கு கஞ்சா கடத்தி வந்து, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் கல்லூரி பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதன்படி ராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபா தேவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், ஜெசிஸ் உதயராஜ் ஆகியோர் சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 21 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கவுண்டம்பாளையம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த முகம்மது ராசிக் (வயது 20), மதுரை, திருப்பாளையத்தைச் சேர்ந்த பாலா (25) என்பதும், கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்ய கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story