மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 பேர் கைது
மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 பேர் கைது
திட்டச்சேரியில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
புதுச்சேரி மாநிலத்திலிருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின்பேரில் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். திட்டச்சேரி பஸ் நிலையம் பகுதியில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 250 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கைது-மோட்டார்சைக்கிள் பறிமுதல்
விசாரணையில் அவர்கள் வேளாங்கண்ணி சுனாமி குடியிருப்பு பூக்காரத்தெருவை சேர்ந்த கலை மாதவன் (வயது 36), வேளாங்கண்ணி செட்டித்தெரு ஜெயமாதா இல்லம் பகுதியை சேர்ந்த ஜூடு அருள்பிரகாசம் ( 49) ஆகியோர் என்பதும், அவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் வேளாங்கண்ணி பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.