மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 பேர் கைது
மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 பேர் கைது
திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் கபூர் தலைமையில் இன்ஸ்பெக்டர் வேலுதேவி மற்றும் போலீசார் நேற்று திருவாரூரில் இருந்து கங்களாஞ்சேரி வழியாக நாகூர் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். பின்னர் மோட்டார்சைக்கிள்களில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் காரைக்கால் திருமலை ராஜன்பட்டினம் போலகம் வடக்கு தெருவை சேர்ந்த கண்ணன் மகன் கரன் (வயது25), அதே தெருவை சேர்ந்த ஸ்டாலின் மகன் முருகேஷ் (21) ஆகியோர் என்பதும், காரைக்காலில் இருந்து சாராயம் மற்றும் மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த சாராயம், 72 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.