புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது
கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு புகையிலை பொருட்கள் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பொள்ளாச்சி,
கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு புகையிலை பொருட்கள் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வாகன சோதனை
கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக நகர மேற்கு போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் மணிக்குமார் மற்றும் போலீசார் காந்தி மார்க்கெட் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காருக்குள் இருந்த மூட்டைகளில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் பின்னால் வந்த மற்றொரு காரை சோதனை செய்த போது, அதிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
2 பேர் கைது
இதை தொடர்ந்து போலீசார் காருடன், அதில் இருந்தவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோவிந்தாபுரத்தை சேர்ந்த பால்ராஜ் (வயது 35), அதே பகுதியை சேர்ந்த ரியாசுதீன் (36) என்பது தெரியவந்தது.
மேலும் கேரளாவில் இருந்து புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்து பொள்ளாச்சியில் அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 10 கிலோ 800 கிராம் புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.