தோட்டத்தில் செவ்வாழைத்தார்கள் திருடிய 2 பேர் கைது
தோட்டத்தில் செவ்வாழைத்தார்கள் திருடிய 2 பேர் கைது
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் கெண்டையூர் நஞ்சுண்டேஸ்வரர் காலனியை சேர்ந்தவர் சின்ன கண்ணன் (வயது 68). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் செவ்வாழைத்தார்களை பயிரிட்டு வந்தார். இந்த நிலையில் தோட்டத்தில் அடிக்கடி வாழைத்தார்கள் திருட்டுப் போய் வந்தது. கடந்த 14-ந் தேதி காலை 9 மணிக்கு அவரது தோட்டத்தில் இருந்து 2 பேர் செவ்வாழைத்தார்களை தோளில் சுமந்து வந்து கொண்டிருந்தனர்.
இதுகுறித்து தெரிய வந்ததும் சின்ன கண்ணன் மற்றும் அங்கிருந்தவர்கள் உடனே இரண்டு பேரையும் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 2 பேரும் நெல்லித்துறையைச் சேர்ந்த சிவா (24), மேட்டுப்பாளையம் பத்ரகாளி அம்மன் கோவில் ரோடு முதல் வீதியைச் சேர்ந்த சக்திவேல் (26) என்பதும் தெரியவந்தது. கையும் களவுமாக பிடிபட்ட இரண்டு பேரையும் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.