தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை-பணம் திருடிய 2 பேர் சிக்கினர்
பாளையங்கோட்டையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை-பணம் திருடிய 2 பேர் சிக்கினர்.
பாளையங்கோட்டை சாந்திநகர் 27-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் அபுதாகீர் (வயது 31). தனியார் நிறுவன ஊழியர். இவர் கே.டி.சி. நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்ற போது மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த 12 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2.50 லட்சத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தார்.
இந்த நிலையில் கேரளாவில் பதுங்கி இருந்த கோட்டயம் தளக்குடி சுனாமி பிளாட்டை சேர்ந்த அப்துல் ஜெயலானி (33), செங்கோட்டை மேலூர் கே.சி.ரோடு பகுதியை சேர்ந்த அப்துல்நசீம் மகன் சதாம்உசேன் (39) ஆகியோரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அபுதாகீர் வீட்டில் தங்க நகைகள், பணம் ஆகியவற்றை திருடியதை ஒத்துக்கொண்டனர். இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 பவுன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.