2 பேர் ெவட்டிக் கொலை


அருப்புக்கோட்ைட அருகே 2 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். தி.மு.க. பெண் நிர்வாகி கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த பயங்கர சம்பவம் நடந்திருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்ைட அருகே 2 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். தி.மு.க. பெண் நிர்வாகி கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த பயங்கர சம்பவம் நடந்திருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.

தி.மு.க. பெண் நிர்வாகி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள உடையனாம்பட்டியை சேர்ந்தவர், சந்திரசேகர். இவருடைய மனைவி ராக்கம்மாள் (வயது 52). ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி. தி.மு.க. மகளிர் அணி துணை அமைப்பாளராகவும் இருந்து வந்தார். இவர்களுக்கு சூரியபிரகாஷ் (20) உள்பட 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ராக்கம்மாள் கடந்த மார்ச் மாதம் குடும்ப பிரச்சினையில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக திருச்சுழி போலீசார் விசாரணை நடத்தி 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த சபரிமலை (36) என்பவர், தற்போது ஜாமீனில் வெளியே வந்திருந்தார். அருப்புக்கோட்டை அருகே குலசேகரநல்லூரில் தன்னுடைய உறவினரான ரத்தினவேல்பாண்டியன் (32) வீட்டில் தங்கி இருந்தார்.

இரட்டை கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற சபரிமலை, ரத்தினவேல்பாண்டியன் ஆகிய 2 பேரும் வீடு திரும்பவில்லை. இரவில் குடும்பத்தினர் தேட தொடங்கினர். பல்வேறு இடங்களில் தேடிய நிலையில், அருப்புக்கோட்டை புறவழிச்சாலை அருகே காட்டுப்பகுதியில் படுகாயங்களுடன் 2 பேரும் பிணமாக கிடந்ததை நேற்று அதிகாலையில் கண்டுபிடித்தனர்.

உடனடியாக அதுபற்றி அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தனர். குற்ற தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியா பாய், தாலுகா இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் கழுத்து அறுக்கப்பட்டும், கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை ராக்கம்மாள் கொலைக்கு பழிக்குப்பழியாக நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தடவியல் நிபுணர்கள் மூலம் போலீசார் தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் மூலமும் சோதனை நடந்தது.

இரட்டைக்கொலை சம்பந்தமாக போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவின்பேரில் துணை சூப்பிரண்டு ராஜாமணி தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து, கொலையாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

5 பேர் மீது வழக்குப்பதிவு

கொலை செய்யப்பட்ட ரத்தினவேல் பாண்டியனின் சகோதரர் மணிகண்டன், அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் ராக்கம்மாளின் குடும்பத்தினர், உறவினர்கள் என 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை கோர்ட்டில் சரண்

இதற்கிடையே இந்த இரட்டை கொலை தொடர்பாக ராக்கம்மாளின் 2 மகன்களும், திருச்சுழியை சேர்ந்த முகேஷ்குமார் (23) என்பவரும் மதுரை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர். 3 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி சந்தானகுமார் உத்தரவிட்டார். பின்னர் 3 பேரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த இரட்டை கொலை சம்பவம் அருப்புக்கோட்டை, திருச்சுழி பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story