ஊழியர் கொலை வழக்கில் பழிக்குப்பழியாகபிரபல ரவுடியை கொலை செய்யஆயுதங்களுடன் காரில் வந்த 2 பேர் கைதுதப்பி ஓடிய 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


ஊழியர் கொலை வழக்கில் பழிக்குப்பழியாகபிரபல ரவுடியை கொலை செய்யஆயுதங்களுடன் காரில் வந்த 2 பேர் கைதுதப்பி ஓடிய 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊழியர் கொலை வழக்கில் பழிக்குப்பழியாக பிரபல ரவுடியை கொலை செய்ய ஆயுதங்களுடன் காரில் வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர்

காரில் ஆயுதங்கள்

கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகிபால் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை சாவடி சோதனை சாவடியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த ஒரு காரை போலீசார் வழிமறித்தனர். போலீசாரை பார்த்ததும் காரில் இருந்த 2 பேர் இறங்கி தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து காரில் இருந்த மேலும் 2 பேரை போலீசார் பிடித்தனர். அந்த காரில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், புதுச்சேரி மாநிலம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் சுதாகர் (வயது 21), சிங்கிரிகுடியை சேர்ந்த அரிகிருஷ்ணன் (20) என்பதும், தப்பி ஓடியவர்கள் புதுச்சேரி மாநிலம் கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்கிற பிரபு, அருண்பாண்டியன் என்பதும் தெரியவந்தது.

பிரபல ரவுடியை கொலை செய்ய...

தொடர்ந்து நடத்திய விசாரணையில், புதுக்கடையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அன்பரசன் என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பழிக்குப்பழியாக புதுச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடியான தாடி அய்யனாரை கொலை செய்ய அன்பரசனின் ஆதரவாளர்களான சுதாகர் உள்ளிட்ட 4 பேரும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் காரில் சுற்றித்திரிந்தது தெரிந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகர், அரிகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து கத்தி, கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர். போலீசாரின் தீவிர நடவடிக்கையால் கொலை முயற்சி தடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story