வீடு புகுந்து திருடிய 2 பேர் சிக்கினர்


வீடு புகுந்து திருடிய 2 பேர் சிக்கினர்
x

வீடு புகுந்து திருடிய 2 பேர் சிக்கினர்.

பெரம்பலூர்

வீட்டில் இருந்த 2 பேர்

பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் நான்கு சாலை அருகே உள்ள சோழன் நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் திட்ட மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இதனால் இவரது மனைவி நிவேதா (வயது 31), தங்களது 3 குழந்தைகளுடன் சோழன் நகரில் வசித்து வருகிறார்.

நேற்று கோனேரிப்பாளையத்தில் வசிக்கும் தனது பெற்றோரான நடராஜன் -ஜோதி ஆகியோரை நிவேதா பார்த்துவிட்டு, தனது தந்தையுடன் மதியம் 2.50 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டிற்குள் எட்டிப்பார்த்தபோது, அங்கு 2 பேர் இருந்தனர். மேலும் நடராஜன், நிவேதாவை பார்த்த அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

பொதுமக்கள் பிடித்தனர்

இதனால் நிவேதா திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், தப்பி ஓடிய 2 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இதையடுத்து பெரம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசாரிடம், அந்த 2 பேரையும் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவர்களை பெரம்பலூர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், வேலூர் மாவட்டம், மேல்மனூர் ஈஸ்வரன்கோவில் தெருவைச்சேர்ந்த மனோகரனின் மகன் சீனிவாசன்(வயது 19), மேட்டூரை சேர்ந்த ராஜாவின் மகன் கவியரசன் (24) என்பதும், சீனிவாசன் பெயிண்டராக வேலை செய்ததும் தெரியவந்தது.

மற்றொரு வீட்டில்...

இதற்கிடையே பெரம்பலூர் நான்குரோடு சந்திப்பு அருகே மின்நகரை சேர்ந்த கனகநாதன் வீட்டில், அவரது உறவினரான தங்கராசு என்பவர் குடியிருந்து வருகிறார். இவர் பொள்ளாச்சியில் வருமான வரி துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று காலை தங்கராசுவும், அவரது மனைவி இந்திராவும் வீட்டை பூட்டிவிட்டு, பொள்ளாச்சிக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர். இந்நிலையில் இந்திராவின் தங்கை மகன் கதிர்வேல், கனகநாதனின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சீனிவாசன், கவியரசன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர்கள் தங்கராசு வீட்டில் திருட சென்றபோது பீரோவிலும், வீட்டிலும் நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் இல்லாததால், பின்பக்க கதவை திறந்து தப்பி சென்றதும். பின்னர் அவர்கள் நிவேதா வீட்டிற்கு சென்று திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

கைது

இதையடுத்து சீனிவாசன், கவியரசன் ஆகியோரிடம் இருந்து சுமார் 7 பவுன் நகையை போலீசார் மீட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்த போலீசார், அவர்கள் மேலும் ஏதாவது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story