ஏரியில் மூழ்கிய 2 பேர் பிணமாக மீட்பு
வாணாபுரம் அருகே ஏரியில் மூழ்கிய 2 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.
வாணாபுரம்
வாணாபுரம் அருகே ஏரியில் மூழ்கிய 2 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.
மீன்பிடிக்க சென்றனர்
வாணாபுரம் அருகே உள்ள கொட்டையூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியில் சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மற்றும் மழை காரணமாக முழு கொள்ளளவு நிரம்பி உள்ளது.
இந்த ஏரியில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மீன்களை பிடித்து செல்வது வழக்கம்.
இந்தநிலையில் குங்கிலியநத்தம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது 42) மற்றும் அவரது உறவினரான விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (37) இருவரும் கடந்த 20-ந் தேதி மீன் பிடிக்க செல்வதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
இரவு வெகுநேரம் ஆகியும் அவர்கள் வீட்டிற்கு வராததால் அச்சமடைந்த உறவினர்கள் ஏரிக்கு சென்று பார்த்தனர்.
தேடுதல் வேட்டை
அங்கு கரையில் மோட்டார் சைக்கிள் மற்றும் உடைகள் செல்போன் உள்ளிட்டவைகள் கிடந்தன.
பின்னர் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீன்பிடிக்க வந்தவர்கள் நீரில் மூழ்கி இருக்கலாம் என்று சந்தேகித்து வாணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து தண்டராம்பட்டு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு பரிசல் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஆனால் நேற்று இரவு வரை தேடிய தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதி சேர்ந்தவர்கள் இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தொடர்ந்து இன்று காலை அப்பகுதியைச் சேர்ந்தவர்களுடன் ஏரிக்குச் சென்று மீண்டும் இருவரின் உடல்களை தேடினர். ஆனால் உடல்கள் கிடைக்காததால் அவர்கள் திரும்பி சென்றனர்.
பிணமாக மீட்பு
இந்த நிலையில் காலை 11 மணி அளவில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஏரிக்கு சென்று பார்த்தபோது ஏரியில் இருவரின் உடல்கள் மிதந்ததைக் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.