ரெயிலில் தப்பி வந்த 2 பேர் அதிரடி கைது
சூரமங்கலம்:-
அரக்கோணத்தில் வாலிபரை வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 2 பேர் ரெயிலில் தப்பி வந்தபோது சேலத்தில் ரெயில்வே போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
வாலிபர் கொலை
சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜான் பிராங்களின் (வயது 29). இவர் கடந்த ஒரு மாதமாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஏ.பி.எம். தேவாலயம் பகுதியில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு ஜான் பிராங்களின் அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை விரைவில் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய 2 பேர் தன்பாத் விரைவு ரெயிலில் (வண்டி எண் 13351) முன்பதிவில்லா பெட்டியில் சேலம் வழியாக தப்பி செல்வதாக அரக்கோணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
2 பேர் கைது
இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை சேலம் ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தன்பாத் ரெயில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு காலை 5.30 மணிக்கு வந்தது. இதையடுத்து போலீசார் அந்த ரெயிலில் முன்பதிவில்லா பெட்டியில் ஏறி சோதனை நடத்தி கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் சென்னை ரெட்ஹில்ஸ் பவானி நகரை சேர்ந்த லோகேஸ்வரன் (வயது 28), மணலியை சேர்ந்த கார்த்தி (28) என்பதும், அரக்கோணம் வாலிபர் கொலையில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.