பெண்ணிடம் பணத்தை திருடிய 2 பேர் போலீசில் ஒப்படைப்பு

வாரச்சந்தையில் பெண்ணிடம் பணத்தை திருடிய 2 பேர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
திருமயம் அருகே உள்ள நச்சாந்துபட்டியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு ஏராளமான வியாபாரிகள் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். கண்டியா நத்தம் பகுதியை சேர்ந்த பார்வதி (வயது 40) என்பவர் நேற்று காய்கறி வியாபாரம் செய்து வந்தார். அப்போது அவரிடம் 2 பேர் காய்கறி வாங்குவது போல் பேச்சு கொடுத்து அவர் வைத்திருந்த பணத்தை திருடிக்கொண்டு காரில் தப்ப முயன்றனர். இதனைகண்டு அதிர்ச்சியடைந்த பார்வதி சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து நமண சமுத்திரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டையை சேர்ந்த ரகுநாத் (37), மதுரையை சேர்ந்த ரவி (61) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.