தோட்டத்துக்கு குளிக்க சென்ற 2 பேர், மின்வேலியில் சிக்கி பரிதாப சாவு
தோட்டத்துக்கு குளிக்க சென்ற 2 பேர், மின்வேலியில் சிக்கி பரிதாப சாவு
தோட்டத்துக்கு குளிக்க சென்ற டிரைவர் உள்பட 2 பேர், மின்வேலியில் பாய்ந்திருந்த மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
தோட்டத்துக்கு குளிக்க சென்றனர்
விருதுநகர் அருகே வாடியூர் கண்மாய் பகுதியில், சதானந்தபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்துக்கு விலங்குகள் ஏதும் வராமல் இருக்க ேமாகன்ராஜ் மின்வேலி அமைத்திருந்தார். சதானந்தபுரம், முதலிப்பட்டி கிராமங்களை சேர்ந்த சிலர், மோகன்ராஜ் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்க செல்வது வழக்கம்.
நேற்று காலை முதலிபட்டி தெற்கு தெருவை சேர்ந்த டிரைவர் சீனிவாசன்(வயது 41) மற்றும் நடுத்தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி முனியசாமி(51) ஆகிய இருவரும் மோகன்ராஜ் தோட்டத்திற்கு குளிக்கச் சென்றனர்.
மின்வேலியில் மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
2 பேர் உயிரிழந்தனர்
இதை அறியாமல், சீனிவாசனும், முனியசாமியும் தோட்டத்து மின்வேலியை தொட்டுள்ளனர். அப்போது மின்சாரம் தாக்கி 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதுபற்றி தகவலறிந்த உறவினர்கள் அங்கு விரைந்து சென்றனர். மயங்கிய நிலையில் கிடந்த சீனிவாசன், முனியசாமியை மீட்டு அம்மாபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கும் கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த சோக சம்பவம் குறித்து துலுக்கப்பட்டி மின்வாரிய உதவி என்ஜினீயர் சந்திரகுமார் அளித்த புகாரின் பேரில் வச்சகாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி, தோட்ட உரிமையாளர் மோகன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.