திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மீது சுற்றுலா வேன் 2 பேர் பலி


திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மீது சுற்றுலா வேன் 2 பேர் பலி
x

திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

சுற்றுலா வேன் மோதல்

திண்டுக்கல் அருகே உள்ள சித்தையன்கோட்டை பங்களா புதுத்தெருவை சேர்ந்தவர் ஷேக் தாவூத் (வயது 38). கூலித்தொழிலாளி. அதே ஊரை சேர்ந்தவர் நிஷார் மைதீன் (37). கார் டிரைவர். இவர்கள் 2 பேரும் நேற்று இரவு சித்தையன்கோட்டையில் இருந்து செம்பட்டி வழியாக திண்டுக்கல் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை ஷேக்தாவூத் ஓட்டி வந்தார். நிஷார் மைதீன் பின்னால் அமர்ந்து வந்தார். திண்டுக்கல் அருகே பித்தளைப்பட்டி பிரிவு பகுதியில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே ஈரோட்டில் இருந்து திண்டுக்கல் வழியாக கேரளா மாநிலம் மூணாறு நோக்கி சுற்றுலா வேன் ஒன்று வந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக சுற்றுலா வேன், மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

2 பேர் பலி

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட ஷேக் தாவூத் சம்பவ இடத்திலேயே பலியானார். நிஷார் மைதீன் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். இந்த விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நிஷார் மைதீனை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஷேக் தாவூத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிஷார் மைதீனும் இன்று பரிதாபமாக இறந்தார்.

டிரைவர் கைது

இந்த விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய ஈரோட்டை சேர்ந்த சுற்றுலா வேன் டிரைவர் ஜெயவிஜயனை (38) கைது செய்தனர். மேலும் சுற்றுலா வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

விபத்தில் பலியான ஷேக்தாவூத்துக்கு யாஸ்மின் (30) என்ற மனைவியும், இத்ரீஸ் (12) என்ற மகனும், ரம்ஜான் (8) என்ற மகளும் உள்ளனர். அதேபோல் நிஷார்மைதீனுக்கு சுலேகாப்பா (34) என்ற மனைவியும், முகமது சபீர் (16), முகமது ரபிக் (13) ஆகிய 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story