ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தவரை தாக்கிய 2 பேர் கைது


ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தவரை தாக்கிய 2 பேர் கைது
x

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தவரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை

ஆக்கிரமிப்பு அகற்றம்

அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 66). இவர் காரைக்குடியில் பார்சல் சர்வீஸ் நடத்தி வருகிறார். இந்தநிலையில், இவர், கல்லூர் கிராமத்தில் அரசால் மயானத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலம் மற்றும் ஊரணி நீர் வரத்து வாரி ஆகியவற்றை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளார்.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் அரிமளம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளனர். அப்போது அங்கு சென்ற கணேசனை சிலர் தகாதவார்த்தைகளால் திட்டி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

2 பேர் கைது

இந்த சம்பவம் குறித்து கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் கணேசன் புகார் அளித்தார். இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து கல்லூர் அம்மன் கோவில் வீதியை சேர்ந்த தனசேகரன் (46), பாண்டியன் (31) ஆகியோரை கைது செய்தார்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சொக்கலிங்கத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story