சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் உள்பட 2 பேர் பலி


சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் உள்பட 2 பேர் பலி
x

அரவக்குறிச்சி அருகே சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 2 பேர் பலியாகினர்.

கரூர்

விபத்து

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி அருகே உள்ள லிங்கமநாயக்கன்பட்டி ரசூல் நகரை சேர்ந்தவர் முகமது சலீம் மகன் ஷபீர் முகமது (வயது 19). வட்டிக்கடையில் வேலை பார்த்து வந்த இவரும், பள்ளப்பட்டி மீரான் நகரை சேர்ந்த ரசாக் மகன் சுகீல் (17) என்பவரும் நேற்று மாலை ஒரு மோட்டார் சைக்கிளில் கரூர் சென்றனர். பின்னர் அங்கிருந்து பள்ளப்பட்டியை நோக்கி வந்து கொண்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளை ஷபீர் முகமது ஓட்டி சென்றார்.

மலைக்கோவிலூர் தேசிய நெடுஞ்சாலையில் தகரக் கொட்டகை பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது நாகம்பள்ளியில் இருந்து தலையணைகளை விற்றுக்கொண்டு சென்ற சரக்கு வேன் சாலையை கடந்து திரும்ப முயன்றபோது, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள், சரக்கு வேன் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஷபீர் முகமதுவும், சுகீலும் படுகாயம் அடைந்தனர்.

2 பேர் பலி

இதில் ஷபீர் முகமது சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த சுகீலை அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே சுகீல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஷபீர் முகமதுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பாளையத்தை சேர்ந்த சரக்கு வேன் டிரைவரான அர்ஜுன்ராஜ்(28) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story