திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில சிறுவன் உள்பட 2 பேர் கைது


திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில சிறுவன் உள்பட 2 பேர் கைது
x

விமானம் மூலம் மதுரை வந்து திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். சந்தைகள் நடக்கும் இடங்களிடம் இவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்

மதுரை

விமானம் மூலம் மதுரை வந்து திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். சந்தைகள் நடக்கும் இடங்களிடம் இவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

2 பேர் சிக்கினர்

மதுரை காமராஜர்புரம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 33). சம்பவத்தன்று இவர் தெற்கு மாரட் வீதி காய்கறி மார்க்கெட் பகுதியில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரிடமிருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பிவிட்டனர்.

உடனே அவர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் அந்த பகுதியை சுற்றியுள்ள இடங்களில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது தெற்குவாசல் பகுதியில் வந்தபோது போலீசார் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் இருவரையும் பிடித்து தெற்குவாசல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விமானம் மூலம் மதுரை வந்தனர்

அதில் அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராகுல்யாதவ் (வயது 19), ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பதும், அவர்கள் தான் வேலுச்சாமியிடம் செல்போனை பறித்து சென்றதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்கள் வைத்திருந்த பை மற்றும் செல்போனை பறிமுதல் செய்து சோதனை செய்தனர். அதில் அவர்கள் விமானம் மூலம் மதுரைக்கு வந்த டிக்கெட் உள்ளிட்ட பல்வேறு படங்கள் இருந்தன. மேலும் செல்போனில் மதுரையில் சந்தை நடைபெறும் இடங்கள், எந்தெந்த கிழமையில் அந்த சந்தை நடைபெறுகிறது போன்ற விவரங்களை குறித்து வைத்திருந்தனர். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அது குறித்து அவர்களிடம் விசாரித்தனர். அதில் அவர்கள் கூட்டம் கூடும் இடங்களில் திருட்டு, வழிப்பறி செய்து விட்டு ஊருக்கு தப்பி சென்று விடுவதாக தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். சம்பவத்தன்று போலீசாரிடம் அவர்கள் சிக்கவில்லை என்றால் மதுரையில் பல்வேறு இடங்களில் நகை, செல்போன் உள்ளிட்ட பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடந்திருக்கும். அதனை தடுத்த போலீசாரை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் பாராட்டினார்.


Related Tags :
Next Story