ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் உள்பட 2 பேர் கைது


ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 Nov 2022 12:30 AM IST (Updated: 25 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

வீடு கட்ட தற்காலிக மின் இணைப்பு வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

மலுமிச்சம்பட்டி

வீடு கட்ட தற்காலிக மின் இணைப்பு வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தற்காலிக மின் இணைப்பு

கோவை போத்தனூர் பாரத்நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் மலுமிச்சம்பட்டி அருகே எம்.பி.ஜி. நகரில் வீடுகட்டுவதற்கு தற்காலிகமாக மின் இணைப்பு கேட்டு மலுமிச்சம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்தார். மேலும் அரசு நிர்ணயித்த கட்டணம் ரூ.2,818-ஐ ஆன்லைனில் செலுத்தினார்.

இந்த விண்ணப்பத்தின் பேரில் மின்வாரிய அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டபோது, புதிதாக கட்டப்படும் வீட்டின் அருகே மின்கம்பம் அமைக்க வேண்டும் என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர். இதையடுத்து மின்வாரிய அலுவலகத்திற்கு சென்ற கார்த்திகேயன் அதிகாரிகளின் அறிவுரையின்படி அரசு செலுத்தவேண்டிய மதிப்பீடு ரூ.37,910-யை செலுத்தினார்.

ரூ.5 ஆயிரம் லஞ்சம்

இதையடுத்து கார்த்திகேயன், இளமின் பொறியாளர் சுப்பிரமணியன் என்பவரை சந்தித்து தற்காலிக மின் இணைப்பு வழங்க கோரிக்கை வைத்தார். அப்போது அவர் மின் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து கார்த்திகேயனிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சமாக வாங்கிவரக்கோரி மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்க்கும் போர்மன் சங்கர்கணஷே் என்பவரை சுப்பிரமணியன் அனுப்பி வைத்தார்.

தொடர்ந்து அவரிடம் நடந்த பேச்சுவார்த்தையில் கார்த்திகேயன் ரூ.5 ஆயிரம் தர சம்மதம் தெரித்துள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கார்த்திகேயன் இதுகுறித்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தொிவித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பொறியாளர் சுப்பிரமணியன் மற்றும் போர்மேன் சங்கர் கணேஷ் ஆகியோரை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.

2 பேர் கைது

அதன்படி கார்த்திகேயனிடம் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுத்து அனுப்பிவிட்டு மறைந்து இருந்தனர். அப்போது அங்கு பொறியாளர் சுப்பிரமணியன் இல்லை. போர்மேன் சங்கர் கணேஷ் மட்டும் இருந்தார். அவரிடம் கார்த்திகேயன் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அப்போது அங்கு வந்த பொறியாளர் சுப்பிரமணியத்திடமும் போலீசார் விசாரித்து அவரையும் கைது செய்தனர்.

1 More update

Next Story