2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து மருத்துவர்கள், நர்சை தாக்கிய வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு உத்தரவிட்டது.
மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து மருத்துவர்கள், நர்சை தாக்கிய வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு உத்தரவிட்டது.
மருத்துவர்கள் மீது தாக்குதல்
காரமடை குட்டையூரைச் சேர்ந்தவர் தங்கராஜ். அவரது தாய் விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் கடந்த 2019 ஜூலை 2-ந்தேதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அப்போது, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அவசர சிகிச்சை பிரிவில் இருந்த மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
பின்னர், ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச்சென்று, மீண்டும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கே அழைத்து வந்துள்ளனர்.
நர்சு காயம்
அப்போது, தங்கராஜ், அவரது நண்பர்களான குட்டையூரைச் சேர்ந்த வினோத்குமார், மேட்டுப்பாளையத்தை அடுத்த தாசம்பாளையத்தைச் சேர்ந்த மீரா மொய்தீன் ஆகியோருடன் இணைந்து, உரிய சிகிச்சை அளிக்கக்கோரி அங்குள்ள மருத்துவர், பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து மருத்துவர், செவிலியர், பணியாளரை தாக்கியுள்ளனர்.
அதோடு, அங்கிருந்த மருந்து, மாத்திரைகள் வழங்கும் ட்ரேயை வீசி எறிந்து சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் நர்சின் காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவை குண்டுவெடிப்பு வழக்குகள் விசாரணைக்கான அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
3 ஆண்டு சிறை
வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி டி.பாலு நேற்று தீர்ப்பளித்தார். அதில், தங்கராஜ், வினோத்குமார் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மீரா மொய்தீன் இந்த வழக்கிலிருந்து விடுதலையானார்.