2 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை


2 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை
x

நள்ளிரவில் வீடு புகுந்து கணவன்-மனைவியை கட்டையால் தாக்கி 11 பவுன் நகையை கொள்ளையடித்த வழக்கில் 2 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

தஞ்சாவூர்
கும்பகோணம் வி.பி.வி. பாக்கியலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 65). ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர். இவரது மனைவி சீதாலட்சுமி (55). கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந் தேதி இரவு கணவன்-மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது அன்றைய தினம் நள்ளிரவு வீட்டின் முன்பக்க கதவை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் 2 பேர், தூங்கிக் கொண்டிருந்த ராமலிங்கம், சீதாலட்சுமி இருவரையும் கட்டையால் தாக்கி சீதாலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து திருவிடைமருதூர் போலீசில் ராமலிங்கம் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

2 பேருக்கு கடுங்காவல் தண்டனை

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பகோணம் அருகே உள்ள திருலோகி பகுதியை சேர்ந்த வேலு (65), தஞ்சாவூர் அருகே உள்ள பூதலூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (47) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கும்பகோணம் சார்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றவாளிகள் 2 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் வேலு, பிரகாஷ் ஆகிய இருவருக்கும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து கும்பகோணம் சார்பு கோர்ட்டு நீதிபதி மும்தாஜ் தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதனையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட 2 பேரையும் திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.Next Story