மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் போன்று நேர்காணல் நடத்திய 2 பேர் கைது
லட்சக்கணக்கில் பணம் கொடுத்த 28 பேருக்கு அரசு வேலை எனக்கூறி மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு வரவழைத்து அதிகாரிகள் போன்று நடித்து, நேர்காணல் நடத்தியதுடன், போலி பணி ஆணையும் கொடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
லட்சக்கணக்கில் பணம் கொடுத்த 28 பேருக்கு அரசு வேலை எனக்கூறி மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு வரவழைத்து அதிகாரிகள் போன்று நடித்து, நேர்காணல் நடத்தியதுடன், போலி பணி ஆணையும் கொடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கலெக்டர் அலுவலகத்தில் வேலை
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகேயுள்ள புளியங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். சமையல் காண்டிராக்டர். இவரை செக்கானூரணியை சேர்ந்த முனீஸ்வரன் சந்தித்து பேசினார். அப்போது தனது நண்பர்கள் ரஞ்சித்குமார், பாண்டியராஜன் ஆகியோர் கலெக்டரின் உதவியாளருக்கு பழக்கமானவர்கள். எனவே மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நிறைய காலிபணியிடங்கள் இருப்பதால் உங்கள் பிள்ளைகளுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி உள்ளார்.
இதை நம்பிய சேகர் தனது மகன் மற்றும் மகளுக்கு உதவியாளர் வேலை வாங்கி தருமாறு ரூ.8 லட்சம் கொடுத்தார். வேலை எப்போது வரும் என்று கேட்ட போது சில மாதங்கள் ஆகும் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வருவாய் துணை அலுவலர் பணி வேலைக்கு பயிற்சிக்கு வருமாறு கூறி தயார் செய்யப்பட்ட ஒரு உத்தரவை கொடுத்துள்ளனர்.
28 பேரிடம் பணம் வசூலிப்பு
அதை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் வேலை கிடைத்ததாக எண்ணிய சேகர், தனது நண்பர்கள் உறவினர்களுக்கும் அரசு வேலை வாங்கி தருமாறு முனீசுவரனிடம் கேட்டுள்ளார். உடனே அவர் 100-க்கும் மேற்பட்ட வேலைகள் காலியாக இருப்பதாக கூறியுள்ளார். உடனே சேகர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 28 பேரிடம் அலுவலக உதவியாளர் பணிக்கு என ரூ.4 முதல் ரூ.5 லட்சம் வரை 17 பேரிடமும், அலுவலக ஆய்வாளர் பணிக்கு சுமார் ரூ.8 லட்சம் வீதம் 5 பேரிடமும், துப்புரவு பணியாளர் பணிக்கு சுமார் ரூ.1½ லட்சம் என மொத்தம் 1 கோடியே 26 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வசூலித்து கொடுத்துள்ளார்.
பணம் கொடுத்தவர்கள் நாட்கள் செல்ல, செல்ல வேலை கிடைக்காததால் அவரை தொந்தரவு செய்ய தொடங்கினர். இந்த நிலையில் அவர்கள் 28 பேருக்கும் 5 மாதம் கழித்து வேலைக்கான போலியாக ஒரு பணிஆணையை தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். அதில் குறிப்பிட்ட நாளில் காலை 7 மணிக்கு நேர்காணலுக்கு வருமாறு குறிப்பிட்டு இருந்தார். அதன்படி அவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
நேர்காணல் நடத்தி பணி ஒதுக்கீடு
அவர்களை கலெக்டர் அலுவலக கேண்டீன் அருகே உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் வைத்து கலெக்டரின் உதவியாளர் என்று கூறிய பாண்டியராஜன் மற்றும் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரும் அதிகாரிகள் போன்று இருந்து நேர்காணல் நடத்தி உள்ளனர். அப்போது நேர்காணலுக்கு வந்த அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணைகளையும் மற்றும் அனைத்து படிப்பு சான்றிதழ்கள், பான் கார்டு, ஆதார் கார்டு. ஸ்மார்ட்கார்டு, போலீசார் சரிபார்ப்பு சான்றிதழ் மற்றும் மருத்துவ சான்றிதழ் ஆகிய அனைத்தையும் வாங்கி வைத்து கொண்டனர்.
பின்னர் நேர்காணலுக்கு வந்தவர்களிடம் இன்னும் 5 நாட்களில் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று பணியில் சேருங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் அவர்கள் முனீஸ்வரன், பாண்டியராஜன், ரஞ்சித்குமார் ஆகிய மூவரும் வேலைக்கு சேர சொன்ன இடத்தில் விசாரித்த போது அப்படி ஒரு பணி எதுவும் அங்கு காலியாக இல்லை என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இதன் மூலம் தாங்கள் ஏமாற்றப்பட்டது அவர்களுக்கு தெரியவந்தது. அதை தொடர்ந்து அவர்கள் பணத்தை திரும்ப கேட்டபோது பணத்தை தரமுடியாது என மிரட்டல் விடுத்துள்ளனர்.
ரூ.1¼ கோடி மோசடி-2 பேர் கைது
இது குறித்து சேகர், மத்திய குற்றப்பிரிவு போலீசில் கடந்த மாதம் புகார் அளித்தார். அதில் முனீஸ்வரன், பாண்டியராஜன், ரஞ்சித்குமார் ஆகியோர் அரசு வேலை வாங்கி தருவதாக 1 கோடியே 26 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக தெரிவித்திருந்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் 3 பேரும் சேர்ந்து போலி நியமன ஆணையை கொடுத்து பணத்தை மோசடி செய்ததும், அந்த பணத்தை அவர்கள் 3 பேரும் பிரித்து கொண்டதும் உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில் ரஞ்சித்குமார் இறந்துவிட்டதை தொடர்ந்து செக்கானூரணியை சேர்ந்த முனீஸ்வரன், வைகை வடகரை பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக போலி பணி ஆணை வழங்கி கலெக்டர் அலுவலகத்திற்குள்ளேயே நேர்காணல் நடத்தியவர்களில் 2 பேர் கைதான விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.