2 கைதிகள் புழல், கோவை சிறைக்கு மாற்றம்


2 கைதிகள் புழல், கோவை சிறைக்கு மாற்றம்
x

2 கைதிகள் புழல், கோவை சிறைக்கு மாற்றப்பட்டனர்.

திருச்சி

திருச்சி:

மத்திய சிறை

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என மொத்தம் 1,500-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் 8 கொலை வழக்கு உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு மதுரை காமராஜபுரம் முத்துராமலிங்க தேவர் தெருவை சேர்ந்த காளி என்ற வெள்ளைக்காளி(வயது 32) என்பவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இவருடைய நண்பர்கள் அழகுராஜ், நாகப்பன் ஆகியோரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். கடந்த மாதம் சிறைக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக அழகுராஜ் உள்ளிட்ட 4 பேர் மீது கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தாக்குதல்

இதைத்தொடர்ந்து அழகுராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை சிறைக்கு மாற்றப்பட்டார். அவரை மாற்றியதற்கு வெள்ளைக்காளி, நாகப்பன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இதுபற்றி சிறைத்துறை அதிகாரிகளிடம் கேள்வி கேட்டதாக தெரிகிறது.

இதனால், இவர்கள் தரப்புக்கும் மற்றொரு தரப்புக்கும் மோதல் உருவாகும் சூழல் ஏற்படவே, அனைவரையும் தனித்தனி அறைகளில் சிறை அதிகாரிகள் அடைத்துள்ளனர். இதற்கிடையே தன்னை பார்க்க வந்த வக்கீலிடம், சிறையில் தன்னை தாக்குவதாகவும், சாதி பாகுபாடு காட்டுவதாகவும் வெள்ளைக்காளி தெரிவித்துள்ளார்.

இடமாற்றம்

இதனால் நேற்று முன்தினம் அவருடைய உறவினர்கள் சிறை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரை சந்திக்க இரவு நீண்ட நேரம் காத்திருந்தனர். பின்னர், நேற்று வெள்ளைக்காளியை சந்தித்துவிட்டு சென்றனர்.

இந்தநிலையில் வெள்ளைக்காளியை சென்னை புழல் சிறைக்கும், அவருடைய நண்பர் நாகப்பனை கோவை மத்திய சிறைக்கும் மாற்ற சிறைத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று மதியம் 2 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனித்தனி வேன்களில் கோவைக்கும், புழல்சிறைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.


Next Story