2 தனியார் பஸ்கள் மோதிய விபத்து: மேலும் ஒருவர் சாவு - பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு


2 தனியார் பஸ்கள் மோதிய விபத்து: மேலும் ஒருவர் சாவு - பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
x
தினத்தந்தி 21 Jun 2023 12:15 AM IST (Updated: 21 Jun 2023 7:16 AM IST)
t-max-icont-min-icon

2 தனியார் பஸ்கள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி நேற்று முன்தினம் காலை தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் கடலூர் அருகே மேல்பட்டாம்பாக்கம் நாராயணபுரம் மெயின்ரோட்டில் வந்த போது, முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடிய பஸ்சும், எதிரே கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த பஸ்சும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், 2 பஸ்களும் அப்பளம் போல் நொறுங்கியது. பயணிகள் பலரும் படுகாயமடைந்தனர். கடலூர் நோக்கி வந்த பஸ்சை ஓட்டி வந்த மோரை எவரெட்புரத்தை சோ்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன் அங்காளமணி (வயது 36), பயணிகளான பண்ருட்டி சேமக்கோட்டை சண்முகம் மகன் சீனிவாசன் (49), திருவெண்ணெய்நல்லூர் காந்திக்குப்பம் குப்பன் மகன் முருகன் (50), பண்ருட்டி மேல்கவரப்பட்டு தனபால் (60), பண்டரக்கோட்டை நடராஜன் (83) ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 91 பேர் படுகாயடைந்தனர். இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் ஒருவர் சாவு

இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடலூர் அருகே உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்த துரை(68) என்பவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் இந்த கோர விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 90 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். விபத்து குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story