தனியார் பஸ்கள் மோதி விபத்து: அனுபவம் வாய்ந்த டிரைவர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் - வேல்முருகன் எம்.எல்.ஏ. பேட்டி
அனுபவம் வாய்ந்த டிரைவர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்று வேல்முருகன் எம்.எல்.ஏ. பேட்டியளித்தாா்.
கடலூர் அருகே மேல்பட்டாம்பாக்கத்தில் நடந்த சாலை விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. நேற்று நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் எலும்பு முறிவு, நரம்பியல் உள்ளிட்ட டாக்டர்களை நியமிக்க வேண்டும். விஷச்சாராயம் குடித்து இறந்த நபர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம், ஆற்றில் மூழ்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் அல்லது ரூ.1 லட்சம் என நிவாரணம் வழங்கப்படுகிறது.
இந்த வேறுபாடு குறித்து ஏற்கனவே சட்டசபையில் பேசி இருக்கிறேன். இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு ஒரே மாதிரியான நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பஸ்களில் அனுபவம் வாய்ந்த, எவ்வித தீய பழக்கங்களும் இல்லாத டிரைவர்களை பணிக்கு அமர்த்த வேண்டும். அதிவேகமாக செல்லும் பஸ்கள், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றுவோர், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் ஆனந்த், கடலூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கண்ணன், அருள்பாபு மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.