தனியார் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் கைது


தினத்தந்தி 24 July 2023 1:00 AM IST (Updated: 24 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

கோவை வடவள்ளியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர்

வடவள்ளி

கோவை வடவள்ளியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

துர்நாற்றம் வீசியது

கோவை வடவள்ளி வேம்பு அவென்யூவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 34). என்ஜினீயர். இவரது மனைவி லக் ஷயா (29). பட்டதாரி. இவர்களுக்கு 10 வயதில் யக்சிதா என்ற மகள் உள்ளார். யக்சிதா அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர்களுடன் ராஜேஷின் தாய் பிரேமாவும் (74) வசித்து வந்தார். இவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் வேம்பு அவென்யூவில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடிவந்தனர். கடந்த 3 நாட்களாக ராஜேசின் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வெளியில் ஆள் நடமாட்டம் இல்லை.

நேற்று முன்தினம் மாலை வீட்டு உரிமையாளர் சீலா மின்விளக்கை போடுவதற்காக வந்தார். அப்போது ராஜேசின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

4 பேர் தற்கொலை

இதனால் சந்்தேகமடைந்த அவர் இதுகுறித்து நீலகிரி மாவட்டம் குன்னூரில் வசித்து வரும் லக் ஷயாவின் தந்தைக்கும், வடவள்ளி போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது ராஜேஷ் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். லக் ஷயா, யக்சிதா, பிரேமா ஆகியோர் விஷம் குடித்து இறந்த நிலையில் கிடந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடிதம் சிக்கியது

தொடர்ந்து போலீசார் வீடு முழுவதும் சோதனை நடத்தினர். இதில் லக் ஷயா எழுதிய கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு ஜெயபாரத், தீபக் ஆகியோர் தான் காரணம் என்று எழுதி இருந்தது. தொடர்ந்து போலீசார் லக் ஷயாவின் செல்போனை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.

இந்த விசாரணையில், லக் ஷயாவுக்கும், சின்மயா நகரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஜெயபாரத் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் நட்பாக பழகி வந்தனர்.

அப்போது லக் ஷயா, ஜெயபாரத்திடம் இருந்து தனது தேவைக்காக அடிக்கடி பணம் வாங்கி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஜெயபாரத் தனது நண்பரான ஆசிரியர் தீபக்கிடம் இருந்து பணம் வாங்கி லக் ஷயாவிடம் கொடுத்தார்.

இவ்வாறு ரூ.25 லட்சம் வரை லக் ஷயாவுக்கு ஜெயபாரத் கொடுத்ததாக கூறப்படுகிறது.

தனியார் பள்ளி ஆசிரியர்கள் கைது

இந்த நிலையில் ஜெயபாரத் மற்றும் தீபக் ஆகியோர் லக் ஷயாவிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் லக் ஷயா அவ்வளவு பெரிய தொகையை திருப்பி கொடுக்க முடியாமல் தவித்து வந்தார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் ஜெயபாரத், தீபக் ஆகியோர் லக் ஷயாவின் கணவரிடம் சென்று, உனது மனைவி எங்களிடம் பணம் வாங்கியுள்ளார் என்றும், அதற்கான ஆதாரம் என பணம் அனுப்பியதற்கான வங்கி பரிவர்த்தணையை காண்பித்துள்ளனர்.

இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இது ஒருபுறம் இருக்க பணம் கொடுத்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தனர். இதன் காரணமாக வாழ்க்கையில் விரக்தியடைந்த ராஜேஷ், லக் ஷயா குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து போலீசார் தற்கொலைக்கு துண்டியதாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஜெயபாரத், அவரது நண்பர் தீபக் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரபரப்பு

கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தனியார் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story