தீ விபத்தில் 2 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்


தீ விபத்தில் 2 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்
x
தினத்தந்தி 21 Oct 2023 12:15 AM IST (Updated: 21 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே தீ விபத்தில் 2 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது. சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம் அருகே உள்ள தியாகை கிராமத்தை சேர்நதவர் அங்கமுத்து(வயது 50). இவர், தனது கூரை வீட்டில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் தாய் செல்லம்மாள், தம்பி மனைவி சுமதி ஆகியோர் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கமுத்து, தாய் மற்றும் தம்பி மனைவி ஆகியோருடன் வீட்டிலிருந்து வெளியே சென்று கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் தங்களது வீடுகளில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து தீயை அணைக்க முயன்றனர். அப்போது வீட்டில் இருந்த 2 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறி யத்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ மளமளவென எரிந்து, அருகில் இருந்த நாராயணசாமி (70) என்பவரது கூரை வீட்டுக்கும் பரவியது.

ரொக்க பணம் எரிந்து சாம்பல்

இது பற்றி தகவல் அறிந்ததும் தியாகதுருகம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் அங்கமுத்து வீட்டில் இருந்த ரூ.1¼ லட்சம் ரொக்கம், 3 பவுன் நகை மற்றும் அத்தியாவசிய பொருட்களும், நாராயணசாமி வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. மின்கசிவின் காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி அறிந்ததும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நேரில் சென்று தீ விபத்தால் பாதிக்கப்பட்ட 2 குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story