2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு

ஏர்வாடி அருகே 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
ஏர்வாடி:
வள்ளியூர் அருகே உள்ள மேலசண்முகபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்வின் மகன் மார்சல் (வயது 24). கட்டிட தொழிலாளியான இவரும், அதே ஊரைச் சேர்ந்த பன்னீர் செல்வம் மகன் விகுபாய் (25) என்பவரும் ஏர்வாடி அருகே உள்ள ஆவரந்தலையில் நடந்த கபடி போட்டியை பார்க்க சென்றனர். அப்போது இவர்களுக்கும், பொத்தையடியை சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில் மார்சல், விகுபாய் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் ராஜபுதூர்-வள்ளியூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பொத்தையடியை சேர்ந்த வைகுண்டராஜா (22), மணிகண்டன் (22) ஆகியோர் சேர்ந்து மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். பின்னர் மார்சல், விகுபாய் ஆகியோரை தகாத வார்த்தைகளால் பேசி அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, வைகுண்டராஜா, மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.






