சேலம் அருகே, சமோசா வாங்கியதற்கு பணம் கேட்டதால் தகராறு: கடை ஊழியர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து


சேலம் அருகே, சமோசா வாங்கியதற்கு பணம் கேட்டதால் தகராறு: கடை ஊழியர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து
x

சேலம் அருேக, சமோசா வாங்கியதற்கு பணம் கேட்டதால் தகராறில் ஈடுபட்டு கடை ஊழியர்கள் 2 பேரை கத்தியால் குத்திய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்

சமோசா கடை

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் அருகே உள்ள மீனவர் காலனியை சேர்ந்தவர் அன்சர் அலி (வயது 34). இவர் சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள வாய்க்கால் பட்டறை பகுதியில் சமோசா கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் அவரது தம்பி அம்சத் அலி (28) என்பவர் உள்பட சிலர் வேலை பார்த்து வருகின்றனர். இந்த கடை விடிய, விடிய செயல்படும் என்று கூறப்படுகிறது.

இந்த கடைக்கு நேற்று அதிகாலை 3 மணி அளவில் மர்ம நபர்கள் 4 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் ரூ.250-க்கு சமோசா வாங்கினர். இதற்கான பணத்தை அவர்களிடம் அம்சத் அலி கேட்டார்.

அப்போது அவர்கள் யாரிடம் பணம் கேட்கிறாய்? என்று கூறி அவரிடம் தகராறு செய்தனர். மேலும் அவர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து அம்சத் அலியின் காலில் குத்திவிட்டு அங்கிருந்து சென்றனர்.

கத்திக்குத்து

பின்னர் அதே நபர்கள் மேலும் நண்பர்கள் சிலரை அழைத்து கொண்டு அந்த கடைக்கு வந்தனர். அவர்கள் கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த அம்சத் அலி மற்றும் வாய்க்கால் பட்டறை பகுதியை சேர்ந்த ருக்குல்லா (42) ஆகியோரை கட்டையால் தாக்கியும், கத்தியாலும் குத்தினர். மேலும் அவர்கள் கடையின் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களின் கண்ணாடியை உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதையடுத்து கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த அம்சத் அலி, ருக்குல்லா ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன் மற்றும் அம்மாபேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story