போலீஸ் நிலையம் அருகே 2 கடைகளை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு


போலீஸ் நிலையம் அருகே 2 கடைகளை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு
x

ராமநாதபுரத்தில் போலீஸ் நிலையம் அருகே 2 கடைகளை உடைத்து பணம், பொருட்கள் முதலியவற்றை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் போலீஸ் நிலையம் அருகே 2 கடைகளை உடைத்து பணம், பொருட்கள் முதலியவற்றை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர் திருட்டு

ராமநாதபுரம் நகரில் கடந்த சில தினங்களாக நள்ளிரவில் கடைகளின் பூட்டை உடைத்தும் பகலில் வேலைக்கு செல்பவர்களின் வீடுகளை குறிவைத்து பூட்டை உடைத்தும் நகை, பணம் முதலியவற்றை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. குறிப்பாக மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பணியாற்றும் மூத்த பெண் அதிகாரி வீட்டிலும், ஆசிரியர் வீட்டிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகை பணம் முதலியவை திருடு போனது. இந்த பரபரப்பு அடங்கும் முன்னர் ராமநாதபுரம் நகரில் நேற்று முன்தினம் இரவு வண்டிக்காரத்தெரு பகுதியில் மளிகை கடை ஒன்றில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம், மற்றும் எடை எந்திரம்,, 3 பெட்டிகள் எண்ணெய் பாக்கெட்டுகள் முதலியவற்றை திருடிச்சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் என்று கூறப்படுகிறது. காலையில் கடையை திறக்க வந்த உரிமையாளர் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ராமநாதபுரம் பஜார் போலீஸ் நிலையம் அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் நிலையம் அருகே

இதேபோல ராமநாதபுரம் நகர் காவல்நிலையம் எதிர்புறம் உள்ள பிளாஸ்டிக் மொத்த விற்பனை கடையின் பூட்டை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.80 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். அதிகாலையில் கடையை திறக்க வந்த வட மாநில உரிமையாளர் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். நகர் காவல்நிலையம் எதிரில் உள்ள கடையில் இந்த திருட்டு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் பற்றி அறிந்த ராமநாதபுரம் பஜார் போலீசார் அங்கு விரைந்து சென்று 2 கடைகளிலும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். நள்ளிரவில் 2 கடைகளின் பூட்டை உடைத்து இந்த திருட்டு நடந்துள்ளது. பூட்டிக்கிடக்கும் கடைகளை குறிவைத்து திருடிச்சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story