2 மாணவிகள் தற்கொலை முயற்சி
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த 2 மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் பூதாமூர் முத்துக்குமாரசாமி நகரை சேர்ந்தவர் தங்கம். இவரது மகள் சாரதா (வயது 15), வடலூரில் உள்ள ஒரு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்ததோடு, அரசு பொதுத்தேர்வை எழுதியிருந்தார். இந்த நிலையில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு வெளியானதில் மாணவி சாரதா 2 பாடத்தில் தோல்வி அடைந்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த சாரதா வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த தீக்காயமடைந்த அவர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்
கம்மாபுரம் அடுத்த சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன் மகள் தீபா(15). இவர் கம்மாபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி இருந்தார். இந்நிலையில், நேற்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அப்போது, மாணவி தீபா, ஒரு பாடத்தில் தோல்வி அடைந்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த மாணவி, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கம்மாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.