குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
நாகர்கோவிலில் தூண்டில் போட்டு மீன்பிடித்த போது குளத்தில் தவறி விழுந்து 2 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் தூண்டில் போட்டு மீன்பிடித்த போது குளத்தில் தவறி விழுந்து 2 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
பள்ளி மாணவர்கள்
நாகர்கோவில் கீழ ஆசாரிபள்ளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராபின். இவருடைய மகன் ஆல்வின் ராஜ் (வயது 10). கீழ ஆசாரிபள்ளம் நடுத்தெருவை சேர்ந்த சேராபின் மகன் ஹர்ஜோன் (10). இவர்கள் இருவரும் நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஆல்வின்ராஜ், ஹர்ஜோன் மற்றும் அவர்களுடைய நண்பர் இம்மானுவேல் (10) ஆகியோர் சேர்ந்து அந்த பகுதியில் ஆர்வமுடன் சைக்கிளில் சுற்றித்திரிந்தனர். பின்னர் நண்பகல் 12 மணிக்கு சிறுவர்கள் 3 பேரும் அந்தோணியார் ஆலயம் அருகே உள்ள ஒரு குளத்தில் மீன்பிடிக்க சென்றனர்.
குளத்தில் தவறி விழுந்தனர்
சிறுவர்கள் தங்களது சைக்கிள்களை குளத்தின் கரையோரம் நிறுத்திவிட்டு, குளத்தின் கரையில் அமர்ந்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். இதில் இம்மானுவேல் குளத்தின் கரையில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை எடுப்பதற்காக சென்றார்.
அப்போது ஆல்வின்ராஜ் மற்றும் ஹர்ஜோன் எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்தனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் இருவரும், 'காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...' என சத்தம் போட்டபடி தண்ணீரில் தத்தளித்தனர். இதை பார்த்து கரையோரம் நின்று கொண்டிருந்த இம்மானுவேல் நண்பர்களை காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. இதையடுத்து இம்மானுவேல் உதவிக்காக அக்கம் பக்கத்தில் யாராவது உள்ளார்களா? என சத்தம் போட்டார்.
2 பேர் சாவு
இதனை கேட்டு அந்த வழியாக சென்ற சில வாலிபர்கள் விரைந்து வந்து குளத்தில் குதித்தனர். அங்கு மூழ்கிய 2 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்த போது மயங்கிய நிலையில் இருந்தனர்.
பின்னர் சிறுவர்களை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது மாணவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.
பெற்றோர் கதறல்
இதனை தொடர்ந்து ஆல்வின்ராஜ், ஹர்ஜோன் ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்தனர். அவர்கள் மாணவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுத காட்சி கல் நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது. குளத்தில் மீன்பிடித்த போது தவறி விழுந்த 2 பள்ளி மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.