ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு
ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே குடமுருட்டி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
மாணவர்கள்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அய்யங்கார் தெருவை சேர்ந்த கார்த்தி. இவருைடய மகன் பிரசன்னா (வயது16). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கும்பகோணம் அய்யங்கார் எருத்துக்கார தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் ஹரிஹரன் (15). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை 11 மணி அளவில் பிரசன்னா, ஹரிகரன் ஆகியோர் தனது நண்பர்கள் 5 பேருடன் கும்பகோணம் அருகே உள்ள கொற்கை முப்பகோவில் பகுதியில் உள்ள குடமுருட்டி ஆற்றுக்கு குளிக்க சென்றனர்.
ஆற்றில் மூழ்கி சாவு
குடமுருட்டி ஆற்றில் அனைவரும் குளித்து கொண்டிருந்தனர். அப்போது பிரசன்னாவும், ஹரிகரனும் ஆற்றில் மூழ்கினர். இதை பார்த்த நண்பர்கள் செய்வது அறியாமல் திகைத்து உடனடியாக அந்த பகுதியை சேர்ந்த மக்களை உதவிக்கு அழைத்தனர். இதைத்தொடர்ந்து 10-க்கும் மேற்பட்டோர் உடனடியாக ஆற்றில் இறங்கி 2 பேரையும் தேடினர். ஆனால் அவர்களை மீட்க முடியவில்லை. .
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பட்டீஸ்வரம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் இறங்கி மாணவர்களை தேடினர். தீவிர தேடுதலுக்கு பின் ஆற்றில் மூழ்கி இறந்த பிரசன்னா, ஹரிகரன் ஆகியோரை பிணமாக மீட்டு வெளியே கொண்டுவந்தனர். 2 மாணவா்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.