கல்லுக்குழியில் தேங்கி நின்ற நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
கல்லுக்குழியில் தேங்கி நின்ற நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
போத்தனூர்
கோவை கே.ஜி.சாவடி அருகே கல்லுக்குழியில் தேங்கி நின்ற நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலியானார்கள்.
கல்லுக்குழி
கோவை கே.ஜி.சாவடி புதூர் வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவருடைய மகன் சஞ்சய் குமார் (வயது17), அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சஞ்சய் (17), இருவரும் டவுன்ஹால் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர். இந்த நிலையில் சஞ்சய் மற்றும் சஞ்சய் குமார் இருவரும் தனது நண்பர்களான சிறுவர்கள் 4 பேருடன் கோவை கே.ஜி சாவடி, காளியாபுரம் புறம்போக்கு இடத்தில் உள்ள கல்லுக்குழியில் குளித்து விளையாடி கொண்டிருந்ததாக தெரிகிறது.
மூழ்கினர்
இதில் சஞ்சய் மற்றும் சஞ்சய்குமார் இருவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில் ஆழமான பகுதிக்குள் குளித்து கொண்டிருந்தபோது திடீரென இருவரும் நீரில் மூழ்கினர். இதனை அறிந்த உடன் வந்த மாணவர்கள் அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனே அவர்கள் வெளியே வந்து கே.ஜி.சாவடி போலீசுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து கிணத்துக்கடவு தீயணைப்பு துறை மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கே.ஜி சாவடி போலீசாருடன் இணைந்து நீரில் மூழ்கிய மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
பிணமாக மீட்பு
இந்த நிலையில் சுமார் 3 மணி நேரம் போராடி கல்லுக்குழியில் மூழ்கிய 2 மாணவர்களின் உடலையும் தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டனர். இதையடுத்து மாணவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மாணவர்களின் உடலை பார்த்து பெற்றோர் கதறி துடித்தனர். இந்த பரிதாப சம்பவம் தொடர்பாக கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.