ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
விருத்தாசலம் அருகே ஏரியில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த வி.குமாரமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் மகன் இன்பராஜ் (வயது 8). அதே பகுதியை சேர்ந்தவர் தெய்வமணி மகன் தினேஷ்குமார் (14).
இதில் இன்பராஜ் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பும், தினேஷ்குமார் கம்மாபுரம் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்த நிலையில் நண்பர்களான இன்பராஜ், தினேஷ்குமார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் பாலாஜி ஆகிய 3 பேரும் அங்குள்ள ஏரியில் குளிக்க சென்றனர்.
அப்போது இன்பராஜ், தினேஷ்குமார் ஆகியோர் எதிர்பாராதவிதமாக ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றனர். இதில் நீச்சல் தெரியாததால் அவர்கள் நீரில் தத்தளித்தனர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பாலாஜி உடனே ஏரி கரையின் மறுபக்கம் சென்று அங்கு மீன்பிடித்துக்கொண்டிருந்தவர்களை உதவிக்கு அழைத்து வந்தான். ஆனால் அதற்குள் இன்பராஜ், தினேஷ்குமார் ஆகியோர் நீரில் மூழ்கினர்.
நீரில் மூழ்கி சாவு
இதையடுத்து மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் ஏரியில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய 2 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது தினேஷ்குமார், இன்பராஜ் ஆகிய 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அவர்களது பெற்றோர் அதிர்ச்சியடைந்து, கதறி அழுதனர்.
இது குறித்த புகாரின் பேரில் கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே கிராமத்தை சேர்ந்த 2 மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.