ஒரே பள்ளியை சேர்ந்த 2 மாணவர்கள் மாயம்
திருப்பத்தூரில் ஒரே பள்ளியை சேர்ந்த 2 மாணவர்கள் மாயமானார்கள்.
திருப்பத்தூர் திருமால் நகரை சேர்ந்த 16 வயது சிறுவன் திருப்பத்தூரில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்தநிலையில் நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த சிறுவன் திடீரென காணவில்லை. சிறுவனை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து சிறுவனின் பெற்றோர் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதேபோல் அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் திருப்பத்தூர் அருகே சின்னபசலைகுட்டை கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தவன் காலையில் வீட்டில் இருந்து மாயமாகி உள்ளான்.
இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.