வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் தனியார் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
கிணத்துக்கடவில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் கோவை மெரைன் கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசாா கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 5 பவுன் நகை, 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிணத்துக்கடவு,
கிணத்துக்கடவில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் கோவை மெரைன் கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசாா கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 5 பவுன் நகை, 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு
கிணத்துக்கடவு அருகே உள்ள லட்சுமி நகர் இம்மிடிபாளையம் சாலையில் வசித்து வருபவர் கோபால கிருஷ்ணன் (வயது 45). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி வித்யா (40). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி கோபால கிருஷ்ணன் வழக்கம்போல வேலைக்கு சென்றார். மதியம் வீட்டில் தனியாக இருந்த வித்யா வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார்.
அப்போது வீட்டிற்குள் நுழைந்த வாலிபர் ஒருவர் வித்யாவின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி 5 பவுன் தங்க செயின்களை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இதுகுறித்து வித்யா கொடுத்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கருப்பசாமி பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
போலீசார் வாகன சோதனை
இந்த நிலையில் நேற்று காலை கிணத்துக்கடவு பழைய சோதனைச்சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
கல்லூரி மாணவர்கள்
விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பேரின்ப நகரை சேர்ந்த சத்தியசீலன் என்பவரது மகன் பேரின்பநாதன் (வயது 19), பரமக்குறிச்சி முந்திரி தோட்டத்தில் வசித்து வரும் ராஜேஷ் என்பவரது மகன் லியோஜோப்ரின் (19) என்பதும், இவர்கள் 2 பேரும் கோவை பிரிமியர் நகரில் உள்ள மெரைன் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.
இதில் பேரின்பநாதன் தான் கிணத்துக்கடவு லட்சுமி நகரை சேர்ந்த வித்யாவிடம் அரிவாளை காட்டி நகை பறித்து சென்றது தெரியவந்தது. மேலும் பேரின்பநாதன், லியோஜோப்ரின் ஆகியோர் சேர்ந்த மோட்டர் சைக்கிள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
2 பேர் கைது
இதையடுத்து கல்லூரி மாணவர்களான பேரின்பநாதன், லியோஜோப்ரின் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மறைத்து வைத்திருந்த 5 பவுன் நகைகள், 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரையும் பொள்ளாச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.